அ.தி.மு.க வின் மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தடை

அ.தி.மு.க வின் மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தடை

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கும் வகையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை இலக்கு வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்று வகையான தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தடைசெய்துள்ளதாக தஹிந்து தகவல் வௌியிட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் இந்திய தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் ஒளிபரப்பு  செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் காட்சிப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தேர்தல் பிரசார பதாதைகளில், குறிப்பிடப்பட்டுள்ளவாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் ஊர்ஜிதப்படுத்தப்படாதவை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள காணி அபகரிப்புகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள்காட்டி தஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தினால் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூவினால் குறிப்பிட்ட விளம்பரங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தேர்தல் விளம்பரங்களை ஔிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு கடிதம் மூலம் தமிழ்நாடு தேர்தல் தலைமை அதிகாரி, அவற்றுக்கு பிரசாரம் வழங்குவதை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

சடலங்களைக் காட்டி இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்புபடுத்தி,  அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்நிறுத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.LEAVE A COMMENT