CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

பிரித்தானியாவில் கைதானவர்கள்  தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை

பிரித்தானியாவில் கைதானவர்கள் தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை

லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், நான்கு இலங்கையர்களின் கைது தொடர்பாக விரைவில் பிரித்தானிய தரப்பினால் தங்களுக்கு அறிவிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் அந்த நாட்டிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இருப்பதாக வௌிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கெப்பிட்டல் நியூஸுக்கு தெரிவித்தார்.

தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நான்கு இலங்கையர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து மெட்ரோபொலிட்டன் காவல்துறையினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எனினும், நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால், அந்த நாட்டிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு இலங்கையர்களும், சர்வதேச விமான சேவை ஒன்றின் ஊடாக லூட்டன் விமான நிலையத்தை கடந்த 10 ஆம் திகதி இரவு 10 மணியளவில் சென்றடைந்த நிலையில், அந்த நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் அவர்களைக் கைதுசெய்திருந்தனர்.

இவர்கள் இலங்கையில் இருந்தே லண்டன் நோக்கி பயணமாகியுள்ளதாக மேலதிக விசாரணைகளில்  மேலும் தெரியவந்துள்ளது



முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்