CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

தமிழ்நாடு- கீழடியில் தொல்பொருள் அகழ்வாய்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு- கீழடியில் தொல்பொருள் அகழ்வாய்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - கீழடியில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவிருந்த தொல்பொருள் அகழ்வாய்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி கிராமம், பண்டைய தமிழர்களின் வசிப்பிடமாகக் கண்டறியப்பட்டு 2013-ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக நடந்த தொல்பொருள்  அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

முன்னெடுக்கப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாய்வுகளுக்குப்பின்னர் அவற்றை நடத்தி வந்த, இந்திய மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கீழடியில் மூன்றாம் கட்ட தொல்பொருள்  அகழாய்வு, இந்திய மத்திய  தொல்லியல்துறையால் நியமிக்கப்பட்ட புதிய கண்காணிப்பாளர் ஸ்ரீராமனின் கீழ் நடைபெற்றது.

இந்த மூன்று கட்டங்களுடன் இந்திய மத்திய  தொல்லியல்துறை தனது ஆய்வினை முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமை காரணமாக, கீழடியின் 4ஆம் கட்ட அகழாய்வை தமிழ்நாடு அரசே மேற்கொண்டது.

இந்த 4ம் கட்ட அகழ்வாய்வுடன் கீழடியில் இதுவரை 14 ஆயிரத்து 500 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப்பணிகளுக்கு 57 லட்சம் இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதும், பின்னர் அவை இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று கீழடியில் ஆரம்பிக்கப்படவிருந்த 5 ஆம் கட்ட தொல்பொருள் அகழ்வாய்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்