CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

காத்தான்குடியில் அராபிய-மயமாக்கம்- ஹிஸ்புல்லாவை குற்றம் சாட்டும் அபுசாலி உவைஸ்

காத்தான்குடியில் அராபிய-மயமாக்கம்- ஹிஸ்புல்லாவை குற்றம் சாட்டும் அபுசாலி உவைஸ்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான M.L.A.M. ஹிஸ்புல்லா  அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியிலேயே, காத்தான்குடியில் அராபிய-மயமாக்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு உறுப்பினரான அபுசாலி உவைஸ் (Aboosali Uvais) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் நேற்றைய தினம் அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போதே, அபுசாலி உவைஸ் (Aboosali Uvais) கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான M.L.A.M. ஹிஸ்புல்லாவின் பதவிக் காலத்தில், காத்தான்குடியில் இடம்பெற்ற அராபிய-மயமாக்கம் தொடர்பில் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அராபிய-மயமாக்கம் முஸ்லிம்களின் பண்பாட்டு விழுமியம் அல்லவெனக் கூறிய அபுசாலி உவைஸ், அது சவுதி அரேபியாவிலிருந்து ஆரம்இக்கப்பட்டு பிறநாடுகளில் பரவிய எண்ணக்கருவேயாகுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினரான ரவி கருணாநாயக்க, காத்தான்குடியில் அரபு மொழியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பதாகைகள் குறித்து இதன் போது கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த, காத்தான்குடி - பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு உறுப்பினரான அபுசாலி உவைஸ் (Aboosali Uvais), பெயர்ப்பலகைகள் எவையும் அரபு மொழியில் இருக்க வேண்டிய தேவை எதுவும் இல்லையெனக் குறிப்பிட்டதுடன், அரபு மொழி கற்கப்படுவது முஸ்லிம்களின் புனித நூலான குரானைப் புரிந்து கொள்வதற்காகவேயொழிய, வெறுமனே காட்சிப்படுத்திக் கொள்வதற்காக அல்ல எனத் தெளிவு படுத்தியுள்ளார்.

மேலும், காத்தான்குடி பிரதான வீதியில் பேரீச்சை மரங்கள் நாட்டப்பட்டுள்ளமை உள்ளடங்கலான அராபிய-மயமாக்கச் செயற்பாடுகள் அனைத்தும் M.L.A.M. ஹிஸ்புல்லா  அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியிலேயே, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபுசாலி உவைஸ் (Aboosali Uvais) குறிப்பிட்டுள்ளார்.  


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்