கெப்பிட்டல் நியூஸுக்கு ஆயுத அச்சுறுத்தல்!

கெப்பிட்டல் நியூஸுக்கு ஆயுத அச்சுறுத்தல்!

கெப்பிட்டல் நியூஸுக்கு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கெப்பிட்டல் நியூஸின் செய்தி ஆசிரியர் ரஞ்ஜன் அருண் பிரசாத்திற்கே, இந்த  ஆயுத அச்சுறுத்தல், இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா - ராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் சீருடை வவுச்சரில் ஆசிரியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக கிடைத்த செய்தியொன்று தொடர்பில் செய்தி ஆசிரியர் ரஞ்ஜன் அருண் பிரசாத், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்திலேயே, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

ராகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை வவுச்சர்களில் மோசடியில் ஈடுபடுவதாகவும், மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துக் கொள்வதாகவும் சமூக வலைத்தளங்களில் மாணவியொருவரின் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது. 

இந்த குரல் பதிவை வெளியிட்ட மாணவி, ராகலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரது பெயரைக் குறிப்பிட்டு, இந்த குரல் பதிவை வெளியிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவிய இந்த குரல்பதிவு குறித்து கவனம் செலுத்திய எமது கெப்பிட்டல் நியூஸ், குறித்த பாடசாலையின் ஆசிரியரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபருடன் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் வினவப்பட்டது.

மாணவியினால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை ராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் நிராகரித்திருந்தார். 

இந்த நிலையில்,  கெப்பிட்டல் நியூஸ் அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொண்ட சிலர், குற்றஞ்சுமத்தப்பட்டதாக கூறப்படும் ராகலை  பாடசாலையொன்றின் ஆசிரியர் மற்றும் அதிபர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, மீண்டும் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில்   உரையாடலை முன்னெடுத்தனர்.

 அலுவலகத் தொலைபேசியூடாக, எம்முடன் தொடர்பினை ஏற்படுத்திய  அவர்களிடம், ஒரு ஊடகவியலாளருக்கு செய்தி சேகரிப்புக்கான உரிமை மற்றும் மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்துவதற்கான உரிமை, ஆகிய விடயங்களை, தெளிவுபடுத்தும் முயற்சி, கெப்பிட்டல் செய்திப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவர்களது தரப்பு நியாயத்தையும், அது குறித்த பாடசாலை அதிபரின் குரல்பதிவையும்,  மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளமையும் அவர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், நுவரெலியா - ராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் சீருடை வவுச்சரில் ஆசிரியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் அந்த செய்தி ஒலிபரப்பப்படும் பட்சத்தில், நிறுவனத்திற்கு எதிராகவும், செய்தி ஆசிரியர் ரஞ்ஜன் அருண் பிரசாத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தொலைபேசி அழைப்பை விடுத்தோர் தரப்பிலிருந்து, மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த செய்தி ஆசிரியர் ரஞ்ஜன் அருண் பிரசாத், இது தொடர்பில் ஒலிபரப்பப்படும் செய்திகான ஆதாரத்  தகவல்கள் தம்மிடம் இருக்கின்றமை காரணமாக,   அந்தச் செய்தி இன்று மாலை  ஒலிபரப்பு செய்யப்படுவதோடு, நாட்டு மக்களுக்கு இது குறித்த விடயங்களை தெளிவூட்டவுள்ளதாக உறுதிபடக் கூறியிருந்தார். 

எனினும், இந்த செய்தி ஒலிபரப்பப்படும் பட்சத்தில், "ஊடகமென்றும் பாராது நிறுவனத்திற்குள் ஆயுதத்துடன் பிரவேசிப்பதாக குறித்த பாடசாலையின் அதிபர் என தன்னை கூறிக் கொண்ட  நபர், செய்தி ஆசிரியர் ரஞ்ஜன் அருண் பிரசாத்திற்கு ஆயுத அச்சுறுத்தல் விடுத்திருந்தார். 


LEAVE A COMMENT