நாடாளுமன்றத்தில் மின் தூக்கி செயலிழந்தமையானது நாசக்கார செயற்பாடு கிடையாது!

நாடாளுமன்றத்தில் மின் தூக்கி செயலிழந்தமையானது நாசக்கார செயற்பாடு கிடையாது!

நாடாளுமன்றத்தில் மின் தூக்கி திடீரென செயலிழந்தமையானது, நாசக்கார செயற்பாடு கிடையாது என ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 

மின்தூக்கி திடீரென இடை நடுவில் நின்றமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மின்தூக்கி செயலிழந்தமை தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டிய மணி செயற்பாடாமை குறித்தும் உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள 9 மின் தூக்கிகள் தொடர்பிலும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை, நாடாளுமன்ற மின்தூக்கியில் ஒரு தடவையில் செல்லும் நபர்களின் எண்ணிக்கை 6 வரை குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகள சேவிதர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த 7ஆம் திகதி, 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மின்தூக்கி இடைநடுவில் செயலிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர். 

குறித்த மின்தூக்கிகள் சுமார் 35 வருட காலம் பழையது என தெரிவிக்கப்படுகின்றது.  


LEAVE A COMMENT