எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள மேலதிக இடைக்கால கொடுப்பனவை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
எனினும் செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் வரையில் மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றறிக்கை ஒன்றை அந்த அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி நடைபெற்ற விசேட சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஓய்வூதியர்களுக்கான தற்போதைய உதவித் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அந்த கொடுப்பனவுடன் மேலதிக இடைக்கால கொடுப்பனவாக மூவாயிரம் ரூபாவை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை இந்த கொடுப்பனவை விநியோகிப்பதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அறிவித்திருந்தது.
முன்னதாக, தேர்தல் காலத்தில் பல்வேறு அரசாங்க அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்களை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்துக்கு பதிலளித்த சமன் ஏக்கநாயக்க, இந்த வேலைத்திட்டங்கள் நெறிமுறையற்றவையல்ல, எனவே அதனை நிறுத்த முடியாது என தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி இந்த கொடுப்பனவு செலுத்துவதை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனிதா