உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி காலி மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறினார்.
அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ , மனுஷ நாணாயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டப்படி செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டாலும் கூட தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அமைச்சு பதவிகளையும் வகிக்த வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறானது எனக்கூறி இருவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நீண்டநாள்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் இன்று காலை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் ஹரின் பெர்ணான்டோ , மனுஷ நாணாயக்கார ஆகியோர் தமது பாராளுமன்ற உறப்பினர் பதவிகளையும் அமைச்சு பதவிகளையும் இழக்க நேரிட்டுள்ளது.