உலகத் தமிழ் மக்களின் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்வதும் இந்து ஆலயங்களுள் தனித்துவமிகுந்து விளங்குவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை பத்து மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றது. செப்டம்பர் முதலாம் திகதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
நல்ல ஊர்களுக்கெல்லாம் நல்லூராக விளங்கும் நல்லூர்ப் பதியில் எழுந்தருளியிருக்கும் கந்தனின் கருணையைப் பெறுவதற்காக உலகெங்கும் பரந்து வாழும் அடியவர்கள் தத்தம் வாழ்விடங்களிலிருந்தவாறே இந்த மகோற்சவத்தில் இணைந்துகொள்கிறார்கள்.
இன்று முதல் அடுத்து வரும் 25 நாள்களுக்குப் பக்திப் பரவசத்துடன் நோன்பிருந்து வேலவனின் அருள்கிடைக்க வேண்டுதல் செய்திடுவர்.
எதிர்வரும் 18ஆம் திகதி மாலை மஞ்ச திருவிழாவும் 25ஆம் திகதி அருணகிரிநாதர் திருவிழாவும் 26ஆம் திகதி மாலை கார்த்திகை திருவிழாவும் 27ஆம் திகதி காலை சூர்யோற்சவ திருவிழாவும் 28ஆம் திகதி காலை சந்தானகோபலர் திருவிழாவும் அன்றையதினம் மாலை கைலாசவாகன திருவிழாவும் நடைபெறவுள்ளன. 29ஆம் திகதி காலை கஜவல்லி, மஹாவல்லி திருவிழாவும் அன்றையதினம் மாலை வேல் விமானம் தங்கரத பவனியும் 30ஆம் திகதி காலை தண்டாயுதபாணி திருவிழாவும் அன்றையதினம் மாலை ஒருமுக திருவிழாவும் 31ஆம் திகதி மாலை சப்பர திருவிழாவும் நடைபெறும்.
செப்டம்பர் முதலாம் திகதி தேர்த் திருவிழாவைத் தொடர்ந்து செப்டெம்பர் 2ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்றையதினம் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன. செப்டெம்பர் 3ஆம் திகதி மாலை பூங்காவன திருவிழாவும் மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறும் என்று நல்லூர்க் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குவதற்காகப் பல நல்லூர்களை உருவாக்கினார்கள். இதில் பாடல்பெற்று விளங்கும் பல பதிகளும் உள்ளன.என்றாலும், திராவிடதேசத்துப் பழம்பெயர் பெற்றிருக்கும் தானங்கள் எனும் பொருள்பற்றி எழுதிய குமாரசாமி அவர்கள் நல்லூரையே முதன்மையானதாக எடுத்துக் கூறியிருக்கிறார். அதேபோன்று நல்லூர் எனும் பெயர்கொண்டு மேலும் நான்கு கிராமங்கள் உள்ளன. பூநகரி, குருநாகல், பாணந்துறை ஆகிய பகுதிகளில் இருக்கின்றன.
ஆனால், நல்லூர் என்றால் அது கந்தன் குடிகொண்டிருக்கும் நல்லூர்ப் பதியான் திருத்தலத்தைக் குறிப்பதாகவே உலக அடையாளமாக விளங்குகிறது.
அதற்குக் காரணம் இந்த நல்லூர்ப் பதி வரலாற்றில் பல சவால்களைச் சந்தித்துள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் ஏனைய சைவக் கோயில்களையும் பாதுகாக்கச் சைவர்கள் தம் உயிரையே தியாகஞ் செய்தார்கள். இதன் பின்னரும் இடைக்கிடை தமிழர் தஞ்சாவூர்ப் படைகளின் உதவியுடன் சவால்களுக்கு எதிராகப் போராடினார்கள்.
இருந்தபோதிலும், நல்லூர்க் கந்தன் மறைந்தெழுந்து நிமிர்ந்து நிற்கிறான். அவனின் மகத்துவத்தால் மீண்டும் வீறுகொண்டெழுந்தது தமிழினம்.
அந்த உறுதிப்பாட்டைச் சிரமேற்றி சீர்போற்றும் வகையில் உலகெங்கும் வாழும் நல்லூரான் அடியவர்கள், அவனுக்காக வருடாந்தம் தம்மை வருத்திகொண்டு வரம் வேண்டி நிற்கிறார்கள்.
இன்று தொடங்கியிருக்கும் நல்லூரான் வருடாந்த மகோற்சவத்தை கெப்பிட்டல் தொலைக்காட்சியும் கெப்பிட்டல் வானொலியும், கெப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சியும் தொடர்ந்து உங்களுக்கு நேரலையாக்கொண்டு வரும்.