எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதே தனது நோக்கம் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற தான் பாரியளவிலான தியாகங்களை செய்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் நாட்டு மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஊழலை இல்லாமல் ஆக்கி, ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து இலங்கையை காப்பாற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்த தன்னால், ஊழல் அரசியல்வாதிகளையும், ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பையும் தோற்கடிக்க முடியும் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சிறந்த, வளமான நாட்டை கட்டியெழுப்ப கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனது பயணத்தில் இணையுமாறு அனைத்து தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.