ஈராக்கில் குழந்தை திருமணத்துக்கு வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் பிள்ளைகளின் திருமண வயதை ஒன்பதாகவும்,ஆண்களின் திருமண வயதை 15 ஆககவும் குறைத்து இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் மனித உரிமை அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்ச வயது எல்லை 18 ஆக உள்ளது. இருப்பினும், ஈராக் நீதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட புதிய சட்டம், குடும்ப விடயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா என்பதை மக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கிறது.
இந்த வயது வரம்பு வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு போன்ற விடயங்களில் பெண்களின் உரிமைகளை பாதிக்கும் என விமர்சகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒன்பது வயது பெண் குழந்தைகளும், 15 வயது சிறுவர்களும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதனால் குழந்தைத் திருமணங்களும், இளம்பெண்கள் சுரண்டலும் அதிகமாக நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது
இதேவேளை மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இந்த சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இளம் பெண்களின் கல்வி, சுகாதாரம், ஒட்டுமொத்த நல்வாழ்வில் இது கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மனித ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைத் திருமணத்தால் பெண்கள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுவது, இளம் வயதிலேயே கர்ப்பம் தரிப்பது, குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் அபாயம் போன்றவைகள் அதிகமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுனிசெஃப் தகவலுக்கு அமைய ஈராக்கில் 28% பெண் பிள்ளைகள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்லும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம் 1959 இல் செய்யப்பட்ட மாற்றங்களை மாற்றியமைக்கும், இது குடும்பச் சட்ட முடிவுகளை மதத் தலைவர்களிடமிருந்து விலக்கி, அந்த அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கியது.
இதேவேளை இந்த சட்டமூலத்தை ஆதரிப்பவர்கள் இது இஸ்லாமிய சட்டத்தை மேலும் சீரானதாக மாற்றும் எனவும் இளம் பெண்களை தகாத உறவுகளிலிருந்து பாதுகாக்கும் என கூறுகின்றனர்.
இருப்பினும், இந்த பகுத்தறிவு குழந்தை திருமணத்தின் ஆபத்துகளை கவனிக்கவில்லை என எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். மதத் தலைவர்கள் திருமணத்தை தீர்மானிக்க அனுமதிப்பது ஈராக் சட்டத்தின் கீழ் சமத்துவக் கொள்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், பிள்ளைகளின் எதிர்காலம், நல்வாழ்வை பறிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
புனிதா