பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனா நாட்டை விட்டு வெளியேறிய பின் அந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர்கள் மீது குறிப்பாக இந்துக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவ்வாறான விடயங்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும்பான்மையாக இருப்பவர்கள் இந்துக்கள்.
இவர்களுள் பெரும்பாலானவர்கள் ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரிப்பவர்கள்.
15 வருடங்களாக பதவியில் இருந்த ஹஸீனா பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
அதன் பிறகு பங்களாதேஷில் உள்ள இந்து மக்கள் மீதும் அவர்களின் ஆலயங்கள் மற்றும் சொத்துக்களின் மீதும் தாக்குதல்கள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் புதிய இடைக்கால அரசின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அது குறித்து நிர்வாகம் கவலை அடைந்துள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
punidha