ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது.
ஆனால், எத்தனை பேர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு எத்தனை பேர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவென உறுதியான தரவுகள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
ரணில் விக்ரசிங்கவின் சந்திப்புகளில் கலந்துகொள்ளும் சிலர் பொதுஜன பெரமுனவின் கட்சியின் கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்கின்றனர்.
இதனால் 16ஆம் திகதி வெளிப்படுத்தப்பட உள்ள கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போதே ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் எத்தனை எம்.பிகள் ஆதரவளிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களால் புதிய கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்தக் கட்சித் தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளிப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரவையில் உள்ள 90 வீதத்திற்கும் அதிகமான அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ளனர். இவர்கள் ஏற்கனவே கட்சியின் செயல்பாடுகளில் கலந்துகொள்வதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தலைமையில் இவர்கள் அடிக்கடி சந்தித்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
16ஆம் திகதி உருவாக்கப்பட உள்ள கூட்டணியில் இவர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.