இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பயிலுனர் பெண் டொக்டர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு முழுவதும் பெண்கள் வீதி வீதியாக ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் கடந்த வாரம் பயிலுனர் பெண் டொக்டர் ஒருவர் அந்த வைத்தியசாலைக்குள் வைத்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நோயாளிகளுக்கு உதவும் வகையில் அந்த வைத்தியசாலைக்கு வரும் ஒரு தொண்டர் ஊழியரே இந்தக் காரியத்தை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 36 மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு, ஓய்வெடுப்பதற்கு ஒரு பிரத்தியேக இடம் கூட இல்லாத அந்த ஆஸ்பத்திரியில் கருத்தரங்கு மண்டபத்தில் அந்த வைத்தியர் சற்று கண் அயர்ந்தபோதே அங்கு வந்த காமுகன் தனது கைவரிசையை காட்டி உள்ளான்.
அடுத்த நாள் காலையில் அங்கு ஓய்வெடுக்க சென்ற ஏனைய வைத்தியர்கள் தமது சகாவின் சிதைக்கப்பட்ட உடலை கண்டெடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதம் உள்ள பெண்கள் இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்களை அணிதிரளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நூற்றுக் கணக்கான பெண்கள் நேற்றிரவு வீதிகளில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் அமைதியாகவே தொடங்கியது.
ஆனால் பொலிஸார் காட்டிய கெடுபிடி காரணமாக சில இடங்களில் கைகலப்புகள் இடம்பெற்றன.
பொலிஸார் சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகித்தனர்.
பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வாகனங்களை சேதப்படுத்தினர்.
புதுடில்லி, ஹைதராபாத், மும்பாய், பூனே ஆகிய பிரதான நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.