அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 11 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து படகு ஒன்றும் இலங்கை கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக முதல்வர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்தானவை என்றும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவ சமூகம் தொடர்ந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றது என்றும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில், மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள் ஒன்றிரண்டு நடந்துள்ளது என்றும் அதற்கும் உடனடி தீர்வு வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்க உடனடியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் முயற்சி செய்யுமாறு மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
VITHUSHAN