நாடு நெருக்கடியான ஒரு நிலையில் இருக்கும் போது சஜித் பிரேமதாஸ நாட்டை பொறுப்பேற்பதற்காக கோட்டாபய ராஜபக்சவிடம் நிபந்தனைகளை முன் வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இதன் போது சஜித் பிரேமதாச நாட்டை பொறுப்பேற்பதற்கான கடிதத்திலும் கையொப்பமிட்டார் என சுட்டிக்காட்டிய அவர்,
இரு நாட்களுக்குள் ரணில் விக்கிரமசிங்க வாலுக்காராம விகாரைக்கு சென்று பிரதமர் பதவியை பொறுப்பேற்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.
பொலன்நறுவை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷடி சில்வா,
“நாடு நெருக்கடியாக இருந்த போது சஜித் பிரேமதாச ஏற்று கொள்ளாமல் ஓடி போனதாக ரணில் விக்கிரமசிங்க பல்வேறு இடங்களிலும் சொல்கின்றார். அந்த சந்தர்ப்பத்தில் ரஞ்சித் மத்துமபண்டார, எரான் விக்கிரமரத்ன, கபீர்ஹாசீம், உட்பட நானும் கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கு சென்றோம். அதன் போது ரமேஷ் பத்திரன, நாலக்க கொடஹேவா ஆகியோர் கோட்டாபாயவுடன் அங்கு இருந்தனர். அப்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து வெளியேறி நாட்டை முன்னேற்றுவது எப்படி என சில நிபந்தனைகளை வழங்கி கலந்துரையாடினோம். அதன் பின்னர் கோட்டாபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பது தொடர்பில் கலந்துரையாடி கடிதத்தில் கையெழுத்திடப்பட்டது. ஆனால் இருநாட்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க வாலுக்காராம விகாரைக்கு சென்று பிரதமராக பதவியேற்றார். அன்று அஙங்கிருந்த 7 பேரில் ஒருவரே நான். இது தான் அன்று நடந்தது. எனவே இந்த கதையை மீண்டும் எங்கேயும் சொல்ல வேண்டாம்.” என்றார்.
புனிதா