இலங்கையின் 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள எவரையும் எனது நிர்வாகம் தண்டிக்க முயலாது தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
2022 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றுவதற்குக் காரணமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு தானும் ஒரு வழிகாட்டியாக இருந்ததாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மாற்றங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மக்கள் விரும்பும் மாற்றத்தின் முகவர்கள் எனவும், ஏனைய அனைத்து வேட்பாளர்களும் பழைய, தோல்வியடைந்த, பாரம்பரிய முறைமையின் முகவர்கள் எனவும் அநுரகுமார தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை அகற்றுவதற்கு அப்பால் திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸாநாயக்க,
மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக அவர்கள் காணப்படவில்லை எனவும், இதன் காரணமாக மாற்றங்கள் தொடர்பில் மக்களின் பெரும் விருப்பம் சாத்தியமாகவில்லை எனவும் தெரிவித்தார்.
மக்கள் விரும்பும் மாற்றமாக தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் காணப்படுவதுடன் மக்கள் ஊழல் அற்ற சமூகத்தில் சிறப்பான பொருளாதாரத்தை எதிர்பார்க்கின்றார்கள் என அந்த கட்சியின் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் வளங்களைத் தேசிய மயப்படுத்தும் கொள்கையை தேசிய மக்கள் சக்தி கட்சி நீண்டகாலமாகக் கொண்டுள்ள போதிலும், பொருளாதார சுதந்திரம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார்.
பொதுமக்கள் மீதான சுமைகளைக் குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என அநுரகுமார தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
நாடு நிதி ரீதியாக வீழ்ச்சியடைந்து காணபட்டதாலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையைச் செய்யப்பட்டது எனவே அதிலிருந்து வெளியேற முடியாது என அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கும்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 26 வருட ஈவிரக்கமற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் – போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் தண்டிக்க முயலாது என அதன் தலைவர் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு விசாரணைகளை மேற்கொள்ள முயலும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு முயலும் எனவும் கட்சியின் தலைவர் கூறினார்.
பொறுப்புக்கூறல் பழிவாங்கும் விதத்தில் இடம்பெறக்கூடாது எனவும் எவரையும் குற்றஞ்சாட்டும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது எனவும் அநுரகுமார குறிப்பிட்டடார்.
அது உண்மையைக் கண்டறியும் விதத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பவில்லை எனவும், அவர்கள் என்ன நடந்தது என அறியவே விரும்புவதாகவும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
punidha