மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இன்று மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றம் தாக்கப்பட்டது . கடந்த 12 வருடங்களாக இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று தற்போது விசாரணைகள் யாவும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர் தரப்பு சாட்சியங்களுக்காக ஏற்கனவே தவணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 4 நந்தேக நபர்களுக்குமான தீர்ப்பு வழங்க மன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளன.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாரனைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள உள்ளதோடு ,ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.