நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் சில தடவைகள் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களில் மாலை இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் அவ்வப்போது மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரை புத்தளத்திலிருந்து காலி மாத்தறை வரையான அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50-55 கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய காற்றின் வேகம் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
punidha