பெண்களின் வலுவூட்டல், பொருளாதார மீட்சியில் இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டி அமெரிக்கா சார்பில் தூதுவர் மிக்கேல் டெய்லர் நேற்று மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் உரையாற்றினார்.
பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளை வரவேற்பதாக கூறிய அவர், ஊழல் எதிர்ப்பு, நீண்ட கால நிலையான வளர்ச்சியில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
நில அபகரிப்புகளை நிறுத்தவும், காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை சித்திரவதைகள் தொடர்வது குறித்த அறிக்கைகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் வலியறுத்தினார்.
நல்லிணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்த தூதுவர், மனித உரிமை மீறல்களுக்கு நீண்டகாலமாக தண்டனை வழங்கப்படாமல் இருப்பதே தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட, சுயாதீனமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான நிலைமாறுகால நீதி நடவடிக்கை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என அமெரிக்க தூதுவர் மிக்கேல் டெய்லர் அழைப்பு விடுத்துள்ளார்.
VITHUSHAN