தனிப்பட்ட வசைபாடல்களால் சூடேறிய விவாத மேடை
நிலை தடுமாறிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் தனிநபர்களை மட்டம் தட்டி நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களும் அதிகரித்துள்ளன.
இது நாம் நமது நாட்டில் கண்டும் கேட்டும் புளித்துப் போன ஒரு விடயம். தனிநபர் வசைபாடல் என்பது நமது அரசியலிலும் தேர்தல் பிரசாரங்களிலும் ஊறிப்போன ஒரு கலாசாரம். கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விட தேர்தல் பிரசாரங்களில் அதிக இடம் பிடிப்பது இந்த தனிநபர் வசைபாடல் தான்.
ஆனால் இன்று இந்த வியாதி எப்படியோ அமெரிக்காவிலும் பரவியுள்ளமை ஆச்சரியமளிக்கின்றது.
அமெரிக்காவிலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தின் மிக முக்கியமான அம்சமும் அழகான ஒரு ஜனநாயக அம்சமாகவும் காணப்படுவது இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையிலான பகிரங்க விவாதமாகும்.
இலங்கையில் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் இருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் காலாகாலமாக அது நடந்து வருகின்றது. இதுவரை கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் விளக்கங்களாகவும் தெளிவு படுத்தலாகவும் அமைந்த அந்த ஜனாதிபதி தேர்தல் விவாத மேடை இன்று மாசு படிந்து வருகின்றமை வேதனை அளிக்கின்றது.
நமது அரசியல்வாதிகள் மத்தியில் வேரூன்றியுள்ள தனிநபர் வசைபாடலை நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாத மேடையிலும் அவதானிக்க முடிந்தது.
2024 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம் பெறவுள்ளது. தற்போது அங்கு தேர்தல் பிரசார களம் சூடேறி வருகின்றது.
பிரதான வேட்பாளர்களான ஜனநாயகக் கட்சியின் கமலா ஹரிஸம் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட முதலாவது பகிரங்க விவாதம் நேற்று பிலடெல்பியா மாநிலத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே பிரசார மேடைகளில் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த கமலாவும் ட்ரம்ப்பும் நேற்று நேரடியாக சந்தித்துக் கொண்ட போதும் அதே விதத்தில் நடந்து கொண்டனர். இது அமெரிக்க மக்களை மட்டுமன்றி உலக அரசியல் அவதானிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தனிப்பட்ட சாடல்களுக்கு இரு தரப்பிலும் பஞ்சமே இருக்கவில்லை.
பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு கொள்கை என எல்லாவற்றிலுமே தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களே அதிகம் காணப்பட்டன.
நீங்கள் ஒரு பொய்யன். பலவீனமானவர் என்று கமலா ட்ரம்ப்பை கேலி செய்தார். நீங்கள் உரையாற்றும் கூட்டங்களில் இருந்து மக்கள் இடை நடுவில் வெளியேறி விடுகின்றனர்.
அது ஏன் என்று தெரியுமா? உங்கள் உரைகள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டன. அவற்றால் அவர்கள் களைத்துப் போய்விட்டனர்.
உங்களால் அவர்களுக்கு ‘போர்’ அடிக்கத் தொடங்கிவிட்டது என்று கமலா அடுக்கிக் கொண்டே போனார்.
ஆத்திரம் அடைந்த ட்ரம்ப் என்ன பேசுவதென்று தெரியாமல் பெரும் சத்திமிட்டு கண்டபடி திட்டத் தொடங்கி விட்டார்.
கமலா ஹரிஸ் அடுத்தடுத்து ஏவிய கணைகளால் கிட்டத்தட்ட ட்ரம்ப் தடுமாறி நிலைகுலைந்து போனதாகவே விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கமலா குறிப்பிட்ட ஒரு தலைப்பில் ட்ரம்பை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த போது அதில் இருந்து தப்ப ட்ரம்ப் வேறு ஒரு விடயத்தை மையப்படுத்தி கூச்சலிடத் தொடங்குவதையும் அவதானிக்க முடிந்தது. ஆனாலும் அது எடுபடவில்லை.
90 நிமடங்கள் நீடித்த இந்த முதலாவது விவாதத்தில் கமலா அம்மாவின் கரங்களே ஓங்கி இருந்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
என்னதான் வசைபாடிக் கொண்டாலும் நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் அவர்கள் இருவருமே கடைசியில் கை குலக்கி விடை பெற்றனர்.
இதில் முக்கிய விடயம் என்ன வென்றால் என்னதான் வாங்கிக் கட்டினாலும் அடுத்த சுற்று விவாதத்துக்கும் தான் தயார் எனக் கூறி ட்ரம்ப் விடைபெற்றார்.
punidha