சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு ஆதரவளித்துள்ளது.
இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது
நாட்டில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்துவது குறித்த முடிவுக்கு 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2025 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளில் ஆண்களுக்கான சட்டபூர்வ ஓய்வூதிய வயது 60இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும்.
பெண் பணியாளர்களின் ஓய்வு வயது 55இல் இருந்து 58 ஆகவும், பெண் தொழிலாளர்களின் ஓய்வு வயது 50இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும்.
மாதாந்திர ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஓய்வூதியப் பங்களிப்புக்கான குறைந்தபட்ச ஆண்டு 15இல் இருந்து 20 ஆக உயர்த்தப்படும்.
இந்த நடைமுறை 2030 முதல் ஆரம்பமாகும்
ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் வீதம், 10 ஆண்டுகளில் இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
ஓய்வூதிய பங்களிப்புகளின் குறைந்தபட்ச ஆண்டை அடைந்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரத்தில், முந்தைய சட்டப்பூர்வ ஓய்வு வயதை விட முன்னதாக ஓய்வு பெற அனுமதி இல்லை.
முதியோர் காப்பீட்டு ஊக்குவிப்பு செயல்முறைகளை செம்மைப்படுத்துதல், சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதைக் கடந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களை உறுதி செய்தல், முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
சீன மக்களின் சராசரி ஆயுட்காலம், சுகாதார நிலைமைகள், மக்கள்தொகை அமைப்பு, கல்வி நிலை ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் ஏற்கப்பட்டிருக்கிறது.