இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் 2007ஆம் ஆண்டில், சர்வதேச ஜனநாயக தினம் நிறுவப்பட்ட பின்னர் செப்டம்பர் 15ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற எந்தவொரு வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை கொண்டாடுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மூலம் ஒவ்வொரு தனி மனிதனும், தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு கருத்தைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாரா இருப்பதாகவும் ஜூலி சங் கூறியுள்ளார்.
தனது உத்தியோபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.