ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரசார சூனிய காலப்பகுதியில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக வேட்பாளர்களை ஊக்குவிக்க முடியாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, நாளையும், நாளை மறுதினமும் பிரசார சூனிய காலகட்டமாக இருக்கும்.
இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்களில் வேட்பாளர்கள் பிரசாரம், சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பிரசார சூனிய காலத்தில் தேர்தல் பிரசாரம், அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த பிரசாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவதூறு பிரசாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.
பிரசார சூனிய காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு அமைப்பு முறை ஒன்றை தயாரித்து வருவதாகவும் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புனிதா