யாழ்ப்பாணத்தில்,  உயிரிழப்புக்கு காரணமான கேபிள் - வழக்கு ஏப்ரலில்!

யாழ்ப்பாணத்தில், உயிரிழப்புக்கு காரணமான கேபிள் - வழக்கு ஏப்ரலில்!

யாழ்ப்பாணம் - நெல்லியடி காவற்துறைக்குட்பட்ட கரணவாய்ப்பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 3ம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 23 ம் திகதி மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்திருந்தனர்.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பங்களில் மின்சார சபையின் அனுமதியின்றி ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனத்தின் கேபிள் இணைப்பில் கடத்தப்பட்ட மின்சாரம் தாக்கியதில் குறித்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணையானது தொடர்ந்தும் தவணையிடப்பட்டு வருவதாக உயிரிழந்த மயில்வாகனம் ஜெகநாதன் என்பவரின் மனைவி சாந்தினி கவலை வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இதுவரையில் ஐந்து பேர் இதேபோன்று குறித்த நிறுவனத்தின் கேபிள் இணைப்பில் கடத்தப்பட்ட மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக முறைபாடுகள் உள்ளமை தெரிவிக்கப்படவேண்டியது.

இதேவேளை, தனது அண்ணனான ஜெகநாதன் சஞ்சீவன், தந்தையை காப்பாற்ற முனைந்த போது இறந்து போனதனையடுத்து குடும்ப பொறுப்பினை 21 வயதே ஆன, தாம் ஏற்கவேண்டி ஏற்பட்டதாக ஜெகநாதன் கானகன் கவலை தெரிவித்துள்ளார்.


அத்துடன், நெல்லியடி காவற்துறை பிரிவில் இடம்பெற்ற இருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரான மாரியப்பன் அசோக்குமார் இந்திய பிரஜையாக இருந்த போதும்,  தான் ஒரு இந்திய பிரஜை என பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வெளிப்படுத்தாது  மறைத்துள்ளதாக தெரியவருகின்றது.


LEAVE A COMMENT