CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கொரோனா வைரஸ் தாக்கம் : இன்றைய நிலவரம் - முழு விபரம் உள்ளே...!

கொரோனா வைரஸ் தாக்கம் : இன்றைய நிலவரம் - முழு விபரம் உள்ளே...!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பிற்பகல் 4.30 வரையான காலப்பகுதியில் நாட்டில் எவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நேற்று வரை 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவ்வாறு எந்தவிதமான பதிவுகளும் இடம்பெறவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் குணமடைந்துள்ளார். 

தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவரே இவ்வாறு குணமடைந்து,  வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இதில் மூன்று பேர் குணமடைந்துள்ள நிலையில், 99 பேர் தொடர்ச்சியாக சிகிச்சைப்பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும், யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பில்  பரிசோதிக்கப்பட்ட 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இன்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையின் பின் யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 

இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்  இதுவரை 2 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 729 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடந்த 20 ஆம் திகதி மாலை 6  மணிமுதல்  இன்று  நண்பகல்  12 மணிவரையான காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 

இதேவேளை, இன்றைய தினம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 23 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்தோடு, கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  தனியார் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

">

மேலும்,  ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொது மக்கள் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கமைய, குறித்த துரித தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி  மருத்துவம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் விநியோகம் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறான சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் 119 / 0112444480 / 81 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்தோடு, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அனைத்து மருந்தகங்களையும் திறந்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அத்துடன், நோயாளிகளின் மருந்துச் சீட்டுகளை ஊரடங்கு காலத்தில் மருந்தகங்களுக்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டாகக் கருதுமாறும் சுகாதார அமைச்சு கோரியுள்ளது. 

மருந்தகங்களில் இருந்து தொடர்ச்சியாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் எதிர்நோக்கக் கூடிய சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் வாகனங்கள் மற்றும் மருந்தகங்களில் பணிபுரிவோர் ஆகியோருக்கு தமது கடமைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் சுகாதார அமைச்சு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து முதியோரைப் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள சுமார் 30 இலட்சம் கொண்ட முதியோர் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்  தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தோடு, இலங்கையில் முகக் கவசத்தை அணிய வேண்டிய கட்டாய நிலை இதுவரை ஏற்படவில்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தேசிய மத்திய நிலையம் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவசியமான சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிய வேண்டியது தேவையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசியமற்ற சந்தர்ப்பங்களில் முகக் கவசம் பயன்படுத்தப்பட்டால், அவசியமான சந்தர்ப்பங்களில் முகக் கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன், யாரையும் முகக் கவசம் அணிய வேண்டாம் என தான் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் காரியாலயங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க தடை விதிப்பது தவறான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான இடங்களில் சமூக இடைவெளியை பேணுவதே சிறந்த நடவடிக்கையாகும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக  ஹோமாகம வைத்தியசாலையை முழுமையாக ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அவிசாவளை, பாதுக்க, கொஸ்கம, கரவனெல்ல, அத்துருகிரிய, ஹொரண, நவகமுவ மற்றும் வேதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்தால் ஹோமாகம வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள 1990 என்ற இலக்கம்  ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்