கஞ்சா கடத்தல் சந்தேகநபர்களை விடுவிக்க கூட்டமைப்பின் முக்கியஸ்தர் அழுத்தம் ?
- By Capital News -
- 06 Jan 2019 -
- 736 Views
கிளிநொச்சி பளை பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரொருவர் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,
அண்மையில் பளை பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர்கள் இருவரும் காவல்துறையினாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்,
இதன் போது சந்தேகநபர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து எந்த காவல்துறை நிலையத்திலும் கையளிக்காமல் காவல்துறையினர் கிளிநொச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே கிளிநொச்சி காவல்நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரொருவர் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு காவல்துறையினருக்கு இதன் போது பணித்துள்ளதாக கொழும்பிலிருந்து வௌிவரும் பிரபல வார இறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது,
குறித்த சந்தேககநபர்கள மீது கேரள கஞ்சா கடத்தல் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போது இருவரையும் விடுவிக்குமாறு குறித்த அரசியல்வாதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஆங்கில ஊடகத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அரசியல்வாதியின் சாரதியின் சகோதரர் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயத்தை காவல்துறை மா அதிபரின் கவனத்துக்கு கிளிநொச்சி காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்,
இதையடுத்து இருவர் மீதும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர் பணித்துள்ளார்