ரஷ்யாவிடமிருந்து இலங்கை உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது!

ரஷ்யாவிடமிருந்து இலங்கை உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது!

ரஷ்யாவிடமிருந்து Mi-17 ரக உலங்கு வானூர்திகளை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள இந்த Mi-17 ரக உலங்கு வானூர்திகள், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கான சேவைக்காக பயன்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஊடகமொன்றுக்கே தயான் ஜயதிலக இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மொஸ்கோவுக்கு விஜயம் செய்த போது, Mi-17 ரக உலங்கு வானூர்திகள் கொள்வனவு குறித்தும் கவனத்திற்கொள்ளப்பட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கொள்வனவு தொடர்பில் இது வரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கொள்வனவு செய்யப்படவுள்ள Mi-17 ரக  உலங்கு வானூர்திகளின் எண்ணிக்கையும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
1990களின் ஆரம்பத்திலிருந்து, இலங்கையினால்  Mi-17 ரக  உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிய வருகின்றது.
இந்த ரக உலங்கு வானூர்திகள் மூலம், பொருட்களை கொண்டு செல்லல், மீட்புப்பணிகள், தீயணைப்பு உதவிகள் போன்ற பல பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதன் காரணமாக, சர்வதேச ரீதியாக நூற்றுக்கும் அதிகமான நாடுகளினால் Mi-17 ரக  உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. 


LEAVE A COMMENT